தமிழகம்

ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சனம் - பாஜக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என ஜெயக்குமார் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ள நிலையில், பாஜகவுடனான கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர் ஜெயலலிதா என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசியல் அனுபவம் இல்லாத பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வரலாறும், பாரம்பரியமும் தெரியாது. மாநிலத் தலைவர் பதவிக்கே தகுதியில்லாதவர் அவர். கடந்த 3 ஆண்டுகளாக நாவடக்கம், தோழமை உணர்வு இல்லாமலும், கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்காமலும் பேசி வருகிறார். திமுகவை விமர்சிக்காமல், அதிமுகவை விமர்சிக்கிறார். மறைந்த தலைவர் ஜெயலலிதா குறித்து அவர் விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால், அதிமுகவின் 2 கோடி தொண்டர்களும் கொதித்துப் போயுள்ளனர்.

இதற்கு முன் பாஜக மாநிலத் தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் தோழமை உணர்வோடு, கூட்டணி தர்மத்தைக் கடைபிடித்து ஒற்றுமையாக இருந்தனர்.

அண்ணமலையின் இந்தப் பேச்சை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் கண்டிக்க வேண்டும்.

நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைபிடித்து வரும் நிலையில், கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறும்போது, இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி தொடர்கிறதா என்ற சந்தேகம் நிச்சயம் எழும். இதற்கு பதில் சொல்லக் கூடியவர்கள் அமித் ஷாவும், நட்டாவும்தான்.

அதிமுகவுக்கு நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், அண்ணாமலையின் செயல்பாடுகள், பாஜக-அதிமுக கூட்டணி தொடரக் கூடாது என்பதாகவே உள்ளது. மேலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரக் கூடாது என்ற நிலையில்தான் அண்ணாமலையின் பயணம் உள்ளது.

கர்நாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை சென்றார். அங்கு பாஜக தோற்றது. இதுவரை எந்த அரசும் 40 சதவீத கமிஷன் வாங்கியதில்லை. ஆனால், கர்நாடக பாஜக அரசு வாங்கியது.

ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, கர்நாடக பாஜக அரசின் ஊழல் பற்றியும் பேச வேண்டியது தானே? ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவைக்குச் செல்ல அதிமுக தானே காரணம்? அதை அண்ணாமலை மறுப்பாரா?

தமிழகத்தில் எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான், பாஜகவுக்கு அடையாளம் கிடைத்தது. இந்த அடிப்படை விஷயத்தை மறந்து, கூட்டணியை முறிக்கும் செயலாக அண்ணாமலையின் செயல்பாடுகள் உள்ளன.

அதிமுகவை விமர்சனம் செய்யும் அண்ணாமலையின் போக்கு தொடர்ந்தால், கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும். தேசிய அளவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் நட்பாக உள்ளனர். எனவே, அண்ணாமலையின் முதிர்ச்சியற்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவர்களது கடமை.

கூட்டணி தர்மத்தைக் கடைபிடித்தால் பாஜகவுக்கு நல்லது. இல்லாவிட்டால், எங்களுக்கு எந்த இழப்பும் கிடையாது. அதை டெல்லியும் உணர்ந்துள்ளது. அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக, டெல்லி தலைமை தக்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

SCROLL FOR NEXT