சென்னை: விபத்து மற்றும் அபராதத்தைத் தடுக்க வலியுறுத்தி பொம்மை வேடமிட்டவர்களை சாலை நடுவே நிறுத்திநூதன முறையில் போக்குவரத்து போலீஸார், ஸ்டாப் லைன்’ விழிப்புணர்வை மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்வு சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது.
விபத்து, விபத்து உயிரிழப்பு மற்றும் வாகன நெரிசலை முற்றிலும் கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறும் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் களப்பணியில் உள்ள போக்குவரத்து போலீஸார் விதிமீறல் வாகன ஓட்டிகளை தங்களது செல்போனில் படம் பிடித்து, அதன் மூலமும் புகைப்படத்துடன் அபராதம் விதிக்கின்றனர். தற்போது, விதிமீறல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் நடமாடும் வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலையில் போக்குவரத்து போலீஸார் இல்லை, போக்குவரத்து போலீஸாரிடம் சிக்காமல் நழுவி விட்டோம் என விதிமீறல் வாகன ஓட்டிகள் நினைத்தால் மறுநாள் அவர்களது செல்போனுக்கு விதிமீறலில் ஈடுபட்ட புகைப்படத்துடன் அபராத ரசீது வந்து விடுகிறது.
இவற்றை தவிர்க்க போக்குவரத்து விதிகளை கண்டிப்புடன் அனைத்து வாகன ஓட்டிகளும் கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னையில் நேற்றுமுதல் 3 நாட்களுக்கு, ‘ஸ்டாப் லைன்’ விழிப்புணர்வை போக்குவரத்து போலீஸார் மேற்கொண்டனர்.
அதாவது, சாலை சிக்னல்களில் காத்திருக்கும் வாகனங்கள் தங்கள்முன் போடப்பட்ட தடை கோட்டில் (ஸ்டாப் லைனை) தங்களுக்கான சமிக்ஞை வரும்வரை காத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் தடையை மீறிச் சென்றாலோ, ஸ்டாப் லைன் கோட்டை தாண்டி நின்றாலோ அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
எனவே, சாலை விதிகளை மீறாமல் அனைத்து வாகன ஓட்டிகளும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலக சாலை சந்திப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையில் போக்குவரத்து போலீஸார், ‘ஸ்டாப் லைன்’ விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொம்மைகளைப் போல வேடமிட்ட 3 பேரைசாலையில் நிறுத்தி நூதன முறையில் இந்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இது வாகன ஓட்டிகளை வெகுவாகக் கவர்ந்தது.