சென்னை: மழைக் காலத்தில் மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்படுவதை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்வு காண்பதற்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 16 சுரங்கப் பாதைகள், 33 கால்வாய்கள், 6 நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கால்வாய்களில் குப்பை கொட்டும் பிரச்சினை நீடித்து வருகிறது. மாம்பலம் போன்ற கால்வாய்களில் குப்பையை அகற்றிய 48 மணி நேரத்தில் நீரோட்டத்தைப் பாதிக்கும் அளவுக்கு மீண்டும் குப்பை கொட்டப்படுகிறது. இதில் மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்.
ஆறுகள், கால்வாய்களில் குப்பை கொட்டுவதைக் கண்காணிக்க 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாகக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கடந்த ஒருமாதத்தில் மட்டும் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.11.55 லட்சமும், கட்டிட இடிபாடுகளைக் கொட்டியவர்களிடம் இருந்து ரூ.9.95 லட்சமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. குப்பை கொட்டுவதைத் தடுக்க இரவு ரோந்துப் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் தேங்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு தண்ணீரை உடனடியாக அகற்றுவதற்காக நூற்றுக்கணக்கான பம்புகள் தயார்நிலையில் உள்ளன. புதிதாகமழைநீர் தேங்கும் இடங்களுக்கும் உடனுக்குடன் சென்று மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆறுகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆறுகள், கால்வாய்களில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. விழும் நிலையில் உள்ள பழமையான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.