தமிழகம்

சித்த மருத்துவரின் ஆலோசனையுடன் குடிப்பது நல்லது: நிலவேம்பு குடிநீர் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் - மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரி அறிவுரை

சி.கண்ணன்

நிலவேம்பு குடிநீர் பற்றி சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பொதுமக்கள் நிலவேம்பு குடிநீரைக் குடிக்கலாம் என்று மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரி டாக்டர் எம்.பிச்சையா குமார் கூறினார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் (குடிநீர்) மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அரசு சார்பில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. வீட்டிலேயே கசாயம் காய்ச்சியும் பலரும் குடிக்கின்றனர். இதற்கிடையில், ‘நிலவேம்பு குடிநீர் குடித்தால் ஆண்மைக் குறைவு ஏற்படும். சிறு நீரகம், கல்லீரல் பாதிக்கப்படும்’ என ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் கருத்து பரப்பப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், இந்திய மருத்துவம் (சித்தா, ஆயுர்வேதா, யுனானி) மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரியுமான டாக்டர் எம்.பிச்சையா குமார், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சித்த மருந்தான நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற்படாகம், சுக்கு, மிளகு, கோரைக்கிழக்கு ஆகிய 9 மூலிகைகள் சேர்ந்த கூட்டு மருந்தாகும். முதலில் சிக்குன் குனியாவுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டு, பலரும் குணமடைந்தனர். அதன் பிறகே டெங்குவுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்குமாறு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012 நவம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் நிலவேம்பு குடிநீரால் லட்சக்கணக்கானோர் குணமடைந்துள்ளனர்.

சித்த மருத்துவம் பிரபலமடைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், நிலவேம்பு குடிநீர் பற்றி வதந்தி பரப்புகின்றனர். அவற்றை நம்ப வேண்டாம். நிலவேம்பு குடிநீரால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்தால் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, நோய் சீக்கிரம் குணமாகும். முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே குடித்தால் காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக குடித்தாலும் வயிற்றுப்போக்கு ஏற்படுமே தவிர, வேறு எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதேநேரம், அவரவர் வயது, எடைக்கேற்பதான் குடிக்க வேண்டும் என்பதால், சித்த மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று குடிப்பது நல்லது.

டாம்ப்கால், இம்ப்காப்ஸ் விற்பனையகங்களில் நிலவேம்பு பொடி கிடைக்கிறது. உரிமம் பெற்ற சில தனியார் நிறுவனங்களும் விற்பனை செய்கின்றன. தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கும்போது, அந்த அட்டையில் நிறுவனத்தின் பெயர், உரிமம் எண், காலாவதி தேதி போன்றவை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி இல்லாத பொடியை வாங்க வேண்டாம். நிலவேம்பு குடிநீர் கசாயம் காய்ச்சி உண்டால்தான் பலன் கிடைக்கும். மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம். போலியாக நிலவேம்பு பொடி தயாரித்து விற்கும் நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகுசாதன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

டெங்கு உள்ளிட்ட காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்துமாறு அரசு கூறினாலும், ஆங்கில முறை (அலோபதி) மருத்துவர்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அரசு மருத்துவமனைகளிலேயேகூட இந்த நிலை இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அலோபதி டாக்டர்களிடம் கேட்டபோது, ‘‘நாங்கள் படித்தது ஆங்கில மருத்துவம். எனவே, அந்த முறையில்தான் சிகிச்சை அளிக்க முடியும். தவிர, எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாத நிலவேம்பு குடிநீரை நாங்கள் எப்படி பரிந்துரைக்க முடியும்?” என்றனர்.

இதுபற்றி சித்தா டாக்டர் எம்.பிச்சையா குமார் கூறும்போது, ‘‘நிலவேம்பு குடிநீர் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் குணமாகிறது என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இது சித்த மருத்துவம் என்று அலோபதி மருத்துவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். எந்த மருத்துவம் என்பது முக்கியமல்ல; நோய் குணமாகிறதா என்பதைதான் பார்க்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT