சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களில் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கேரளத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலமான தேக்கடிக்கு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். தேக்கடியில் படகுசவாரி மற்றும் யானை சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதையடுத்து தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்திருந்தது.
இந்த நிலையில் மூணாறு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் தேக்கடிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் தேக்கடிக்கு சுற்றுலா வந்திருந்தனர். அதனால் படகுசவாரி செய்யும் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை, மாலை நேரங்களில் யானைகள், மான்கள் கூட்டம் கூட்டமாக படகுசவாரி செய்யும் பகுதியில் சுற்றித் திரிவதை அவர்கள் பார்த்து ரசித்தனர். படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து அனுமதி சீட்டு வாங்கினர்.