தமிழகம்

“அமித் ஷா சொன்னது உண்மைதான்” - ஆளுநர் தமிழிசை விவரிப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “தமிழர்கள் பிரதமராக வருவதை தடுத்தார்கள் - மறுத்தார்கள் என்பது மட்டுமல்ல; தமிழரான அப்துல் கலாம் மறுபடியும் குடியரசுத் தலைவராக வருவதை திமுகவும், காங்கிரஸும் தடுத்தனர் என்ற சரித்திரம் மறுக்கப்படாது. இச்சரித்திரத்தை மறைப்பதற்காக ஸ்டாலின் ஏதேதோ கூறி வருகிறார்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் இயக்குநரகத்தைச் சேர்ந்த தேசிய மாணவர் படைப்பிரிவு மாணவர்களின் கடல் சாகச பயணம்-2023 'சமுத்திர பராக்கிரம்' நிகழ்ச்சியின் நிறைவு விழா தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் இன்று நடைபெற்றது. பாய்மர படகில் கடல் சாகச பயணத்தில் 25 மாணவிகள் உட்பட 60 மாணவர்கள் ஈடுப்பட்டு 322 கிலோ மீட்டர் வரை கடலில் புதுச்சேரியில் தொடங்கி கடலூர், பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக காரைக்கால் சென்றடைந்து பின்னர் மீண்டும் அதே வழியில் புதுச்சேரி வந்தடைந்தனர், துணைநிலை ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் கடல் சாகசப் பயணத்தை முடித்து வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழிசை பேசும்போது, "பத்து நாட்கள் சாகசப் பயணம் மேற்கொண்டவர்கள், அவர்கள் சென்ற இடத்தில் எல்லாம் கடற்கரையை சுத்தம் செய்திருக்கிறார்கள், ஞெகிழியை சுத்தம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ரத்த தானம் செய்திருக்கிறார்கள். ஞெகிழியை கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தாவிட்டால் 2050-இல் கடலில் மீன்களை விட ஞெகிழி பொருட்கள் அதிகமாக இருக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

பயணம் மேற்கொள்ளும் போது சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வாழ்க்கையில் எப்படி சவால்களை சந்திக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக கடல் காற்றோடு மாணவர்களின் ஆற்றலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. வாழ்க்கையில் சவால்கள் இருக்க வேண்டும் அதன் ஊடே வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் வாழ்க்கைப் பயணத்தில் சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்." என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறுகையில், ''புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி அனுமதி கிடைத்தற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வருவதை தடுத்தது திமுகதான் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக கூறியுள்ளார், அவர் சொன்னது உண்மை. அதை மறைக்க முடியாது, தமிழர்கள் பிரதமராக வருவதை தடுத்தார்கள் - மறுத்தார்கள் என்பது மட்டுமல்ல தமிழரான அப்துல் கலாம் குடியரசு தலைவராக மறுபடியும் வருவதையே திமுகவும், காங்கிரஸ் தடுத்தனர் என்ற சரித்திரம் மறுக்கப்படாது. இச்சரித்திரத்தை மறைப்பதற்காக ஸ்டாலின் ஏதேதோ கூறி வருகிறார்.

பிரதமர் மோடியை போல் தமிழை யாரும் கையாண்டதில்லை. திருக்குறளை வாசித்ததில்லை. தமிழ் கலாச்சாரத்தை எந்தப் பிரதமரும் பின்பற்றியதில்லை. மோடி ஒரு பச்சைத் தமிழராகவே செயல்பட்டு கொண்டிருக்கிறார். செங்கோல் மூலம் அதை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழைப் பற்றி அவர்கள் மட்டுமே கவலைப்படவில்லை. எங்களுக்கும் கவலை உண்டு. தமிழ் எங்கள் உயிர்மூச்சு " என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ பாஸ்கர் என்கிற தக்ஷிணாமூர்த்தி, தமிழ்நாடு புதுச்சேரி அந்தமான் இயக்குநரகத்தின் துணை தலைமை இயக்குனர் கமாண்டோர் அதுல் குமார் ரஸ்தோகி, புதுச்சேரி தேசிய மாணவர்ப்படை தலைமை அலுவலக குரூப் கமாண்டர் சோம்ராஜ் குலியா, கடலோரக் காவல் படைப்பிரிவின் துணை தலைமை அதிகாரி அன்பரசன் மற்றும் தேசிய மாணவர்ப்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT