சேலம்: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மின் பொத்தானை அழுத்தி முதல்வர் தண்ணீர் திறந்துவைக்க அனைத்து மதகுகள் வழியாகவும் தண்ணீர் சீறிப் பாய்ந்தது. அதில் முதல்வர் மலர் தூவினார்.
மேட்டூர் அணை திறப்பு மூலம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளன. லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தேவையான நீர், மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை கொண்டு குறுவை, தாளடி, சம்பா என 3 பருவங்களில் நடக்கும் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். உரிய நாளான ஜூன் 12-ம் தேதியன்று இதுவரை 18 முறை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். அவருடன் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உடன் இறந்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், "குறித்த நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். டெல்டாவில் ஏற்கெனவே 1.6 லட்சம் ஏக்கரில் நடவுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவர். நடப்பாண்டில் ரூ.75.95 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். " என்றார்.