தமிழகம்

கருணாநிதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்கள் அமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவரும், 13 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு, அனைத்து முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழக அரசியல் தலைவராக மட்டுமின்றி, இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த கருணாநிதியின் பன்முக ஆற்றலையும், அவரது மக்கள் நலத் திட்டங்களையும் வருங்காலத் தலைமுறையினர் போற்றும் வகையில், மாநிலம் முழுவதும் ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர், “நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய கருணாநிதியை பெருமைப்படுத்தும் விழாக்களாக மட்டுமின்றி, அவர் மக்களின் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் விழாக்கள் அமைய வேண்டும். பெரிய அளவிலான விழாக்களாக மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விழாக்களாக இவற்றை நடத்த வேண்டும்” என்றார்.

மேலும், “பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோர் இணைந்து கொண்டாடுவதாகவும் அமைய வேண்டும்” என்றும் முதல்வர் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டு, அவர் தமிழக மக்களின் நலனுக்காக ஆற்றிய பணிகள், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த குறும்படத்தையும் வெளியிட்டார்.

மேலும், “இதழாளர்–கலைஞர், எழுத்தாளர் - கலைஞர், கலைஞர்- கலைஞர், சமூக நீதிக் காவலர்-கலைஞர், பண்பாட்டுப் பாசறை-கலைஞர், ஏழைப் பங்காளர்-கலைஞர், சட்டமன்ற நாயகர்- கலைஞர், பகுத்தறிவு, சீர்திருத்தச் செம்மல் - கலைஞர், நவீன தமிழ்நாட்டின் சிற்பி - கலைஞர், நிறுவனங்களின் நாயகர் – கலைஞர், தொலைநோக்குச் சிந்தனையாளர் - கலைஞர், தமிழ்த்தாயின் தவப்புதல்வன் - கலைஞர்” ஆகிய தலைப்புகளில், அமைச்சர்கள் தலைமையில், இணைத் தலைவர்கள், உறுப்பினர்-செயலர் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட 12 குழுக்களை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் குழுவினர், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்களுடன் இணைந்து, விழாவை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும். இது தொடர்பான திட்டப் பணிகளை மேற்கொண்டு, அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இக்குழுக்கள் மேற்கொள்ளும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT