கோப்புப் படம் 
தமிழகம்

ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களை போல தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களைப்போல, தமிழ்நாட்டிலும் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் (கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன்) பணியாற்றி வருகிறார்கள்.

தாங்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்று அவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். பகுதிநேர ஆசிரியர்களை மட்டும் பணி நிரந்தரம் செய்ய அரசு தயங்குவது ஏன்? இதே காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 5 ஆயிரம் துப்புரவாளர்கள் மற்றும் இரவுக் காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என நம்பினோம். எனினும், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

2006-ல் கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றவுடன், மிகக் குறைந்த ஊதியத்தில், தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த 50,000 பேரை ஒரே அரசாணையில் பணி நிரந்தரம் செய்தார். அப்போதும் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தது. தற்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதால், அரசுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இதை மனதில் கொண்டு, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும்.

ஒடிசா மாநிலத்தில் 57ஆயிரம் தற்காலிகப் பணியாளர்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் 1.10 லட்சம் தற்காலிகப் பணியாளர்கள் முறைப்படுத்தப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல, தமிழ்நாட்டிலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விஜயகாந்த் கோரிக்கை... இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களுக்கு மே மாதம் ஊதியமும் வழங்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பது மனிதநேயமற்றது. அவர்களுக்கு உடனடியாக மே மாத சம்பளத்தை வழங்க வேண்டும். அதேபோல, அவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய, தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT