சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை எஸ்எம்சி மூலம் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-23-ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் இருந்த ஆசிரியர் காலி பணியிடங்கள், பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டன.
மேலும், முதுநிலை ஆசிரியருக்கு ரூ.18,000, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 மாத தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஆசிரியர் காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நிரப்புவது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அதிகாரம் அளித்து ஆணை வெளியிடப்பட்டது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு, மகப்பேறு விடுப்பால் ஏற்பட்ட காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
பணிநியமனத்தில் கல்வித் துறையின் வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்ற வேண்டும். இதுகுறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.