தமிழகம்

மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்வது அதிமுகதான்: ஜெயக்குமார் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்று இறுதி செய்வது நாங்கள்தான் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

பாஜக தென் சென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனால், தென் சென்னை தொகுதியில் பாஜக போட்டியிடக் கூடும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது, ‘அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே, பாஜகவினர் தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு முக்கியத்துவம் அளித்து, அங்கு பணியாற்றி வருகிறார்களே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெயக்குமார் பதில் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இடம் பெற்றுள்ளது. அவர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து எங்களிடம் தெரிவிப்பார்கள். அது அவர்கள் கடமை.

ஆனால், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இறுதிசெய்வது எங்கள் பொறுப்பு. அதிமுக பொதுச் செயலாளர், கட்சி முன்னோடிகளைக் கலந்தாலோசித்த பின்னர் இறுதி முடிவை எடுப்பார். தேர்தல் அறிவிக்கும்போது, தொகுதி பங்கீட்டுக் குழு அமைக்கப்படும். அக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய முடிவு எடுப்பார்கள். அதிமுக வேட்பாளர்களை, கட்சியின் ஆட்சிமன்றக் குழு அறிவிக்கும்.

பாஜகவைப் பொறுத்தவரை, அவர்களது கட்சியை வளர்ப்பதற்காக பல்வேறு தொகுதிகளுக்கும் செல்லலாம். அதை வைத்துக்கொண்டு, அங்கு அவர்கள் போட்டியிடுவார்கள் என்று கூற முடியாது.

குறிப்பிட்ட தொகுதியை அவர்கள் கேட்பதாக இருந்தாலும், அதைக் கொடுப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள் நாங்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT