கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை. 
தமிழகம்

பொன்னேரி அருகே கோயில் குளம் தூர்வாரும்போது ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

பொன்னேரி: பொன்னேரி அருகே பெரியகரும்பூர் கிராமத்தில் பெருமாள் கோயில் குளம் தூர்வாரும் பணியின்போது ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பெரியகரும்பூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் குளம், கிராம மக்களின் முயற்சியால் தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, பொக்லைன் மூலம் குளம் தூர்வாரும் பணி நடந்த போது, சுமார் 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. அச்சிலையை கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் வைத்து பூட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினரும், போலீஸாரும் நேற்று சிலையை மீட்க பெரியகரும்பூர் கிராமத்துக்கு சென்றனர். கிராம கோயிலுக்கு உண்டான பழங்கால பொன்னியம்மன் ஐம்பொன் சிலை தற்போது கிடைத்திருப்பதாக தெரிவித்து சிலையை அரசிடம் ஒப்படைக்க கிராம மக்கள் மறுத்தனர்.

இதையடுத்து, கோளூர் வருவாய் ஆய்வாளர் கனிமொழி, கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன் உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு, ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை கிராம மக்கள் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

21 கிலோ எடை கொண்ட அச்சிலையை பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள வருவாய்த் துறையினர், கண்டெடுக்கப்பட்ட சிலை கருவூலத்தில் வைக்கப்படும் எனவும், சிலை எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பது உள்ளிட்டவை குறித்து தொல்லியல் துறை மூலம் ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT