தமிழகம்

சென்னை, புறநகரில் சூறைக்காற்றுடன் மழை: 2-வது நாளாக பெய்ததால் பூமி குளிர்ந்தது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை, புறநகரில் நேற்றும்இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சென்னை, புறநகரில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிக வெப்பத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து வந்த நிலையில், சென்னை, புறநகர் பகுதிகளில் குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை.

போக்குவரத்து நெரிசல்: வெயிலும் 104 டிகிரிக்கு மேல் பதிவாகி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை, புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் செல்ல முடியாமல் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இடி, மின்னலுடன் மழை: இதனிடையே, நேற்று இரவும் சென்னை மற்றும் புறநகரில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் மழை நீடித்தது.

சாலையில் தேங்கிய மழைநீர்: மாநகரப் பகுதியில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம், பெரம்பூர், கொளத்தூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான மாங்காடு, பூந்தமல்லி, திருமழிசை, குன்றத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து, சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

குளிர்ச்சியான சூழல்: ஞாயிற்றுக்கிழமை இரவு என்பதால் வாகனங்கள் குறைவாக இயக்கப்பட்ட நிலையில்,சாலைகளில் நெரிசல் தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் பெய்த திடீர் மழையாலும், நேற்று முன்தினம் மழை பெய்ததாலும் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குளிர்ந்த சூழல் நிலவியது.

SCROLL FOR NEXT