விழுப்புரம்: ‘டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக தொடர்ந்து வசூலிக்கிறார்கள். இந்தத் தொகையை என்னதான் செய்கிறார்கள்?’ என வாசகர் ஒருவர் நமது ‘இந்து தமிழ் திசை’ - ‘உங்கள்குரல்’ பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரித்த போது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு; விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 221 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாளொன் றுக்கு ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. பண் டிகை நாட்களில் இந்த விற்பனை இரு மடங்காக அதிகரிக்கிறது.
இந்தச் சூழலில் 10 ஆயிரம் பாட்டில்களுக்கு இந்த 10 ரூபாய் கூடுதல் வசூல் என்றாலே ரூ.1 லட்சம் வரை தனியாக வசூலிக்கப்படுகிறது. இப்படி கூடுதல் வசூல் நடைபெறுவதை டாஸ்மாக்கில் அனைத்து மட்டத்திலும் ஒத்துக்கொள்கின்றனர்.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனை யாளர்கள், கண்காணிப்பாளர்களிடம் கேட்டபோது தங்கள் பெயர்களை குறிப் பிடக் கூடாது என்று கூறி, அவர்கள் அளித்த தகவல்கள் பின்வருமாறு:
வாடகை ஒப்பந்தத்தை விட கூடுதல் வாடகை தர வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.400 முதல் அதிகபட்சம் ரூ, 1,000 வரை கொடுக்க வேண்டும். வாட்ச்மேனுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரமேனும் கொடுக்க வேண்டும். பெட்டி இறக்குவதற்கு கூலியாக பெட்டி 1-க்கு ரூ.5 மாமூல் ரூ.100 தர வேண்டும். அதில் கெடுபிடி செய்தால் ‘பாட்டில் டேமேஜ்’ கூடும்.
கடைகளுக்கு சரக்கு அனுப்புபவர் பில் போட மாமூல் ரூ.500 முதல் ரூ.5,000 வரை கொடுக்க வேண்டும். ஆடிட்டிங் செய்யும் ஆடிட்டர்களுக்கு ஒரு கடைக்கு மாதம் ரூ.1,200 கொடுக்க வேண்டும். கூடுதல் கலால் அலுவலருக்கு மாதம் ரூ.1,200, மாவட்ட கலால் அலுவலருக்கு மாதம் ரூ.700, டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு விற்பனையில் 3.5 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும்.
இதுதவிர காவல்துறையில் பகல் பீட்டுக்கு ரூ.300 மற்றும் குவாட்டர், இரவு பீட்டுக்கு ரூ.200 மற்றும் குவாட்டர்; இது இல்லாமல் அரசியல் கட்சிகள், கோயில் திருவிழா நன்கொடைகள் இருக்கின்றன. இந்தச் செலவையெல்லாம் ஈடுகட்டவே குடிமகன்களிடம் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்குகிறோம். இப்படி வாங்காவிட்டால் மேற்கண்ட செலவினங்களை எங்களால் சமாளிக்கவே முடியாது என்று கூறுகின்றனர்.