முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழகம்

தமிழகத்தை  பாழ்படுத்த நினைக்கும் கூட்டம்தான் எனது வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் தான் தனது வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக அண்மையில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு நான் சென்றிருந்தேன். சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. வருகிற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருக்கிற உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ள பெரும்பாலான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

இந்தியாவில் தமிழகம் – குறிப்பாக சென்னையும் உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மையமாக அமைந்திருக்கிறது. ஜப்பானைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. எனவே நாம் அவர்களுக்கு தமிழகத்தை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான தமிழகத்தில் கடந்த பத்தாண்டு போல அல்லாமல் இப்போது நடைபெறும் நமது திராவிட மாடல் ஆட்சியில் தொழில் வாய்ப்புகளுக்கும் முதலீடுகளுக்கும் ஏற்ற சூழல் நிலவுவதைச் சுட்டிக்காட்டி தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் நேரடியாகச் சென்று அழைப்பு விடுத்தோம். அழையா வீட்டுக்கு எந்த விருந்தாளியும் வரமாட்டார்கள்.

நம்முடைய மாநிலத்தில் நிலவும் சூழல், அரசு செயல்படுத்தி வரும் முன்னேற்றத் திட்டங்கள், வளமான எதிர்காலத்தை நோக்கி நாம் நடைபோடும் பாதை, நம்முடைய படித்த இளைஞர் வளம் போன்றவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டினால்தான் முதலீட்டாளர்கள் ஆர்வத்தோடு நம் மாநிலத்துக்கு வருவார்கள்.

அப்படி முதலீட்டாளர் மாநாட்டுக்கு வரும் நிறுவனங்கள் நேரில் நம்முடைய கட்டமைப்புகளைப் பார்த்து ஆய்வு செய்து முதலீடுகளைச் செய்வார்கள். ஆனால் அதனைக் கூட தமிழகத்தை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் கொச்சைப்படுத்துகிறது. அவர்களுக்கு கொச்சைப்படுத்த மட்டும்தான் தெரியும். எதையும் ஆக்கத் தெரியாது! அழிக்கத்தான் தெரியும். அந்த வேலையைத்தான் அவர்கள் செய்கிறார்கள். செய்யட்டும், நான் கவலைப்படவில்லை.

'போற்றுவார் போற்றட்டும் - புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்' என்று நினைத்து கடந்து செல்பவன் நான். கருணாநிதி வழியில் வந்தவன் நான். மக்கள் பணியாற்றவே நேரமில்லை. மக்களுக்கு பிணியாக இருப்பவர்களுக்கு பதில்சொல்ல எனக்கு நேரமில்லை. ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட கருணாநிதியின் நூற்றாண்டான இந்த ஓராண்டு காலத்தில் தமிழக மக்களுக்கான மாபெரும் திட்டங்களைத் தீட்டிக் காட்டி – கருணாநிதி இன்னும் ஆள்கிறார், வாழ்கிறார், வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார் என்ற பெயர் வாங்குவோம்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT