நிலத்தை விற்ற முருகதாஸ், நிலத்தை வாங்கிய சேதுபதி
பழநி: பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்தவர், வாங்கியவர்கள் என 4 பேர் மீது பழநி அடிவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பத்திரப்பதிவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி, தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தனர். நேற்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி தேவஸ்தான நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம், வழக்குப் பிரிவு கண்காணிப்பாளர்கள் சிவனேசன், கணபதி, வட்டாட்சியர் (ஓய்வு) மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) சின்னசாமி ஆகிய 5 பேரிடம் எஸ்பி சாஜிதா விசாரணை நடத்தினார்.
இதேபோல, பத்திரப்பதிவு அலுவலகத்தில் மற்றொரு குழுவினர் ஆய்வு செய்து சிசிடிவி வீடியோ பதிவுகளைப் பெற்றுக்கொண்டனர். கிடுக்கிப்பிடி விசாரணையால் தேவஸ்தானம் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேரந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைதுரை மற்றும் பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறைவானதும், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பத்திரப்பதிவு நாளில் சாட்சிக் கையெழுத்திட்டோரும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. முறைகேடாக கோயில் நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்பட பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய சேதுபதி ஆகியோரது புகைப்படமும், நிலம் தொடர்பான வில்லங்கச் சான்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தண்டபாணி சுவாமிகள் மடம் தொடர்பான வில்லங்கச் சான்று.
மேலும் 2 பேருக்கு தொடர்பு? - கடந்த மார்ச் மாதம் ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்தபோது, பணியில் இருந்த சார்பதிவாளர் பழனிச்சாமி வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிவு செய்ய இயலாது எனக்கூறி நிராகரித்தார். அவர் பணியிட மாறுதலில் சென்றார். பின்னர் சார்பதிவாளர் பாலசந்தர் பொறுப்பேற்ற நிலையில் ஜூலை 3-ம் தேதி சர்ச்சைக்குள்ளான நிலத்தை பதிவு செய்வதற்கான சில முன்னேற்பாடுகள் நடந்துள்ளன.
ஜூலை 6-ம் பாலசந்தர்விடுமுறையில் சென்றதால், சிறப்பு பணிக்கு வந்த ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தை பதிவு செய்துள்ளார். இந்த விஷயத்தில் மேற்கண்ட 3 பேரிடமும் சிபிசிஐடி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் பல முக்கிய அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வீடியோ ஆதாரங்களை வைத்து சிபிசிஐடி போலீஸார் 3 குழுவாக பிரிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.