மதுரை: “பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் 2 ஆயிரம் பேரை பாஜகவில் உறுப்பினராகச் சேர்த்தால், தமிழகத்தைக் கைப்பற்றலாம்” என்று மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் யோசனை தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் பாஜக சிந்தனையாளர்கள் பிரிவு சார்பில் 'தமிழ்நாடு டயலாக் 2023 ஸ்பாட் லைட்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநில பிரிவுத் தலைவர் ஸ்ரீஷெல்வி கே.தாமோதர் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, பட்டிமன்றப் பேச்சாளர் மணிகண்டன், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சூரியனார்கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசும்போது, "மனிதனாகிய நாம் நல்ல வாழ்வு வாழவேண்டுமானால் சரியான பாதை, அறநெறியுடன் வாழ வேண்டும். மனிதன் மேம்பட வேண்டும் என்றால் வழிபாட்டில் ஈடுபடுவேண்டும்.
உலக நாடுகளிலேயே இந்திய வல்லரசாக அடிகோளிட்டது முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தான். அதன் பிறகு தற்போதுள்ள பிரதமர் மோடி, இந்தியாவை உலக அளவில் வல்லரசாக்க பெரும்பங்கு வகித்து வருகிறார். இதற்கு நாம் சரியான முறையில் வரிகளை செலுத்த வேண்டும். இதனால் பொருளாதாரம் மேம்படும். சமுதாயமும் வளரும். அரசாங்கம் நல்ல முறையில் செயல்பட வேண்டும் என்றால், நாம் வரிகளை முறையாகச் செலுத்த வேண்டும். இன்று பல்வேறு வளர்ந்த நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ந்து விட்டது. ஆனால், இந்தியா மட்டும் உயர்ந்த பொருளாதாரத்தில் இருக்கின்றது என்றால், அதற்கு நாம் செலுத்துகின்ற வரியும், இந்தியாவை வழிநடத்துகின்ற பாங்காகும்.
இந்தியாவிலுள்ள கோயில்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் அரசியல் ஆளுமைகள் நேர்மையாகவும், சிறந்த சிந்தனையாளர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை பாதுகாக்க முடியும். அதனால், நாட்டினுடைய தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் சரியான பாதையில், வழியை தேர்ந்தெடுத்தால் மட்டும்தான் இந்த நாடு அனைத்திலும் சூபிட்சம் அடையும். உலக அளவில் இந்துத்துவமும் தழைத்தோங்க வேண்டும் என்றால், வரும் 2024-ம் நாடாளுமன்றத் தேர்தலில் குடும்பத்துடன் யாருக்கு மலரிட வேண்டுமோ அவர்களுக்கு மலரிடுங்கள்" என்றார்.
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பேசும்போது, "இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் ஒருவருக்கு கூட தமிழ் உணர்வு இல்லை. ஆனால் தற்போதுள்ள பிரதமர் மோடிக்கு மட்டும் தான் தமிழ் உணர்வு உள்ளது. பிரதமர் மோடி கங்கை, காசி, அயோத்தி ஆகிய இடங்களில் கோயில்களும், புதிய நாடாளுமன்றத்தையும் கட்டினார். இலங்கையில் வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். எனவே, நமக்கு நல்ல பிரதமர் கிடைத்துள்ளார். அவரது கரத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் 2 ஆயிரம் பேரை பாஜகவில் உறுப்பினராகச் சேர்த்தால், நிச்சயமாக தமிழகத்தைக் கைப்பற்றலாம்" என்றார்.