கோவை: அரசுப் பேருந்துகளில் விரைவில் இ-டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு,உதகை மண்டலத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள், விருப்ப ஓய்வுபெற்ற மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுகள் என மொத்தம் 518 பேருக்கு, ரூ.145.58 கோடி மதிப்பிலான பணப் பலன்களை மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் கோவையில் நேற்று வழங்கினர்.
இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, ‘‘கோவை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகளை முதல்வர் விரைவில் தொடங்கிவைப்பார்” என்றார்.
அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது: புதிதாக 2,000 பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. மேலும், ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 2,400 பேருந்துகள் வாங்கப்படும். அவற்றில் 430 தாழ்தளப் பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மற்ற பேருந்துகளை வாங்க விரைவில் டெண்டர் விடப்படும். இன்னும் 4 முதல் 6 மாதங்களில் புதிய பேருந்துகள் வந்துவிடும். ஓய்வூதியர்களின் கூடுதல் பஞ்சப்படி தொடர்பான கோரிக்கை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாநகர அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்த, தானியங்கி கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அது நடைமுறைக்கு வரும். தொடர்ந்து, மற்ற இடங்களிலும் இது விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வறையை திறந்துவைத்த அமைச்சர்கள், கோவையில் 65 அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன், முன்கூட்டியே பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் திட்டத்தையும் தொடங்கிவைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பா.திருவம்பலம்பிள்ளை கலந்துகொண்டனர்.