சென்னை: மாசுபட்டு கிடக்கும் கூவம் ஆற்றை மீட்டெடுக்க சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் பல ரூ.100 கோடி செலவில் கூவம் ஆற்றின்கரையோரம் வசித்து வந்த குடும்பங்கள் அகற்றப்பட்டு, அக்குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் கரையோரங்களில் நீண்ட காலமாக கொட்டப்பட்ட குப்பை, கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டன. அதன்மூலம் ஆற்றின் அகலம்அதிகரித்தது. ஆற்றில் மீண்டும் குப்பையை கொட்டாதவாறு அதன் இரு கரைகளிலும் சுவர்கள் எழுப்பப்பட்டு, இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆற்றில் அடித்து வரப்படும் கழிவுகள் மற்றும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றுவதற்காக ஆங்காங்கே கரையோரங்களில் நுழைவு வாயில்கள் அமைத்து, இரும்பு கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் புதுப்பேட்டை, அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவகம் பின்புறம்போன்ற பகுதிகளில் சில இடங்களில் கதவுகளைஉடைத்து அப்புறப்படுத்தி விட்டு சிலர் குப்பைகளை கொட்டி, மீண்டும் ஆற்றை மாசுபடுத்த தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக வாசகர் ஒருவர், இந்து தமிழ்திசையின் உங்கள் குரல் பிரத்யேக தொலைபேசி தேவையை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தார். இதுதொடர்பான செய்தி கடந்த ஜூன் 2-ம் தேதி வெளியானது. இதன் எதிரொலியாக நுழைவு வாயில்களில் கதவுகள் இல்லாத இடங்களில் மீண்டும்கதவுகளை பொருத்தும் பணிகளை மாநகராட்சிஅதிகாரிகள் தொடங்கியுள்ளனர். மேலும் அப்பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த குப்பையையும் அகற்றியுள்ளனர்.