சிங்கம்புணரி: எஸ்.புதூர் அருகே 3 கி.மீ. நடந்து சென்று விவசாயக் கிணற்றில் கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே தர்மபட்டி கொண்ட பாளையம் ஊராட்சி தேனம்பட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடந்த 2020-ம் ஆண்டு கட்டப்பட்ட 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 3 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. மேலும் மின் மோட்டார்கள் பழுதானதால் இங்குள்ள 4 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளும் பயன்பாடின்றி உள்ளன. காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட தண்ணீரும் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை.
இதனால், இப்பகுதி மக்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று விவசாயக் கிணறுகளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் அவர்களின் அன்றாட பணிகளுக்கு செல்வதில் வீண் தாமதம் ஏற்படுகிறது. முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி கூறியதாவது: எங்கள் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உவர்ப்பாக உள்ளது. குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் காவிரி குடிநீரும் வரவில்லை. தண்ணீருக்காக நாங்கள் தினமும் அலைந்து வருகிறோம். இதனால் விவசாயப் பணிகள், கூலி வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று கூறினார்.