பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்த போது கார் மோதியதில் மூன்றரை வயது சிறுவன் ஹிருத்திக் ரோஷனின் இரண்டு கால்களும் துண்டாகிவிட்டன. துண்டான கால்களை இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.கார்டன் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி (35). வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை செய்கிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு நித்ய (7) என்ற மகள், மூன்றரை வயதில் ஹிருத்திக் ரோஷன் என்ற மகன் உள்ளனர். இருவரும் சூளை காளத்தியப்பர் தெருவில் உள்ள மழலையர் தொடக்கப் பள்ளியில் படிக்கின்றனர். 2-ம் வகுப்பு படிக்கும் நித்யஸ்ரீக்கு மதியம் 3 மணி வரை பள்ளி உண்டு. ஹிருத்திக் ரோஷன் எல்.கே.ஜி. என்பதால் பிற்பகல் 1 மணிக்கே பள்ளி விட்டுவிடும்.
இருவரையும் அவர்களது அம்மா கீதாதான் தினமும் பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வார். பிற்பகல் 1 மணி அளவில் பள்ளிக்கு வருவார். ஹிருத்திக்கை அழைத்துக்கொண்டு, மதியம் 3 மணி வரை அங்கேயே காத்திருப்பார். நித்யஸ்ரீயும் வந்த பிறகு, இரு குழந்தைகளுடன் வீடு திரும்புவார்.
வழக்கம்போல, கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் பள்ளிக்கு வந்தார் கீதா. பள்ளி விட்டதும் மகன் ஹிருத்திக்கை அழைத்துக்கொண்டு அருகே உள்ள பிளாட்பாரத்தில் அமர்ந்தார். டிபன்பாக்ஸில் கொண்டுவந் திருந்த உணவை ஹிருத்திக் ரோஷனுக்கு ஊட்டிக் கொண்டி ருந்தார். அதே பள்ளியில் படிக்கும் கிருத்திகா (4) என்ற குழந்தையும் அருகே உட்கார்ந்திருந்தாள். அவள் சூளை சட்டநாதன் தெருவைச் சேர்ந்தவள்.
அப்போது, அந்த பிளாட்பாரத்துக்கு எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒரு கார் வெளியே வந்தது. அந்த குடியிருப்பைச் சேர்ந்த ராகுல் தோகா (25) என்பவர் காரை ஓட்டிவந்தார். சாலையில் கார் இறங்கியதும், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தை நோக்கிப் பாய்ந்தது. அங்கு உட்கார்ந்திருந்த கீதா, ஹிருத்திக், கிருத்திகா மீது பலத்த வேகத்தில் மோதியது.
இதில் ஹிருத்திக்கின் 2 கால்களும் துண்டாகின. மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கால்கள் துண் டான சிறுவன் ஹிருத்திக் ரோஷனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கவனக்குறைவாக கார் ஓட்டியதாக ராகுல் தோகா கைது செய்யப்பட்டார்.
சிகிச்சை குறித்து ஸ்டான்லி டாக்டர்கள் கூறும்போது, ‘‘சிறுவன் ஹிருத்திக் ரோஷனின் கால் எலும்புகள் உருத்தெரியாமல் நசுங்கிவிட்டதால் அவற்றை ஆபரேஷன் மூலம் இணைக்க முடியவில்லை. கால்கள் துண்டிக் கப்பட்ட இடத்தில் ஆபரேஷன் செய்து நரம்புகளை மூடி சிகிச்சை அளித்திருக்கிறோம். அந்த இடத் தில் காயம் குணமாகி, செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட பிறகுதான் சிறுவனால் நடக்க முடியும். செயற்கைக் கால்களுக்கு யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும்’’ என்றனர்.