சி.விஜயபாஸ்கர் | கோப்புப்படம் 
தமிழகம்

தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் ஆகியவை விநியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்து, தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.

மேலும், வாக்காள்ரகளைக் கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததைவிட அதிகமாக செலவு செய்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டுக் கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார்" என்று மனுவில் கோரியிருந்தார். தனக்கு எதிரான இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜயபாஸ்கர் தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி விஜய்பாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT