சென்னை: பட்டமளிப்பு விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் வழங்கப்பட்ட விளக்கத்தில், ‘‘இதுவரை 7 பல்கலைக்கழகங்களில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதில் சென்னை பல்கலை. (ஜூன் 16), வேலூர் திருவள்ளுவர் பல்கலை. (ஜூன் 19), பெரியார் பல்கலை. (ஜூன் 29), மீன்வளப் பல்கலை. (ஜூலை 7) தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலை., நெல்லை மனோன்மணீயம் பல்கலை., கோவை வேளாண் பல்கலை. ஆகியவற்றில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.
இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் மட்டுமே கரோனா பரவலால் 3 ஆண்டுகளுக்கு சேர்த்து மாணவர்களுக்கு தற்போது பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. கோவை பாரதியார் பல்கலை.யில் இதுவரை துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. துணைவேந்தர் நியமிக்கப்பட்டு இருந்தால், அங்கு பட்டமளிப்பு விழாவை நடத்த அனுமதித் திருப்போம். தமிழ்நாடு அரசு சார்பில் அதற்காக தேடுதல் குழு அமைக்கப்படவில்லை. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.