மேட்டூர் - மேச்சேரி சாலையில் அதிவேகமாக போட்டி போட்டுக் கொண்டு சென்ற தனியார் பேருந்துகள். 
தமிழகம்

மேட்டூர் - மேச்சேரி சாலையில் போட்டி போட்டு செல்லும் தனியார் பேருந்துகளால் விபத்து அபாயம்

த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் - மேச்சேரி சாலையில் போட்டி போட்டுக் கொண்டு செல்லும் தனியார் பேருந்துகளால் விபத்து அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து நகர் மற்றும் கிராமங்களுக்கும், வெளி மாவட்டத்திற்கும் அரசுப் பேருந்து மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேட்டூரில் இருந்து சேலத்திற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகமாக செல்கின்றனர்.

ஆனால் ஒரு சில தனியார் பேருந்துகள் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொள்வது மட்டுமின்றி, மற்றொரு பேருந்துடன் போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பயணிகள் உயிரை கையில் பிடித்தபிடி அச்சத்தில் பயணிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில், இரு தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மேட்டூர் தெர்மல் சாலையில் அதிவேகமாகவும், போட்டி போட்டுக் கொண்டும் பேருந்தை இயக்கினர்.

இது குறித்து வீடியோ வெளியான நிலையில், பேருந்து உரிமையாளர்களை அழைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால், அதிகாரிகள் எச்சரித்தும், தனியார் பேருந்துகள் மீண்டும் அதிவேகமாகவும், போட்டி போட்டுக் கொண்டும் செல்வது தொடர் கதையாக உள்ளது என பொதுமக்கள் அதிருப்தியுடன் தெரிவித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: மேட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்துகள், வழியில் பயணிகளை ஏற்றுவதற்காக, பேருந்து நிலையம், நகரப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. பின்னர், மற்றொரு பேருந்து வருவதைப் பார்த்த பிறகு அதிவேகமாகவும், போட்டி போட்டுக் கொண்டும் செல்கின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

SCROLL FOR NEXT