சென்னை: கடற்கரை - சேப்பாக்கம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையை 7 மாதங்களுக்கு ரத்து செய்யத் திட்டமிருந்த நிலையில், தற்போது இந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு இடையூறின்றி இந்த திட்டத்தை செயல்படுத்த புதிய கருத்துருகள் பெறுவது என்றும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இடநெருக்கடி நிலவுவதால், பல்வேறு விரைவு ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதை செயல்படுத்துவற்கு வசதியாக, சென்னை கடற்கரை- சேப்பாக்கம் இடையிலான பறக்கும் ரயில் சேவையை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்ய உள்ளதாகவும், சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் தகவல் வெளியாகின.
இது தொடர்பாக ரயில்வே அலுவல் சார்ந்த உள் சுற்றறிக்கை வெளியானது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றும், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கடற்கரை-சேப்பாக்கம் வரையிலான பறக்கும் ரயில் சேவையை ரத்து செய்யும் திட்டத்தை தள்ளிவைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மக்கள் எதிர்ப்பு காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு இடையூறின்றி 4-வது பாதை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து புதிய கருத்துருகளைப் பெற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் சேவை ரத்து தொடர்பாக எந்த இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. சேப்பாக்கம் நிலையத்தில் பறக்கும் ரயில் சேவையை நிறுத்தும் முந்தைய திட்டத்தை திரும்பப்பெறும் சுற்றறிக்கை, ஓரிரு நாட்களில்வெளியிடப்படும். நாங்கள் பெருநகரப்போக்குவரத்துக் கழகம் மற்றும்போக்குவரத்து செயலருடன் ஆலோசித்து, ஒரு திட்டத்தை இறுதி செய்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.