சென்னை: தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், சென்னை மண்டலத்தில் இயங்கி வரும் செங்கல்சூளை, அரிசி ஆலை மற்றும் கட்டுமானத் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கிண்டியில் உள்ள இயக்ககத்தின் கருத்தரங்கு கூடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழிப்புணர்வு பயிற்சி நிகழ்வை, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநர் எம்.வி.செந்தில்குமார் தொடங்கி வைத்து பேசியது:
குழந்தை தொழிலாளர்களை அனைத்து விதமான பணிகளிலும், வளர் இளம்பருவத்தினரை அபாயகரமான தொழிற்சாலைகளிலும் பணியமர்த்தக் கூடாது.வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்தும்போது அவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, இருப்பிடம் ஆகிய வசதிகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ள வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றார்.
குழந்தை தொழிலாளர் சட்டம்: நிகழ்ச்சியில், இணை இயக்குநர் க.நிறைமதி வரவேற்றார். தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர், வளர் இளம் பருவத்தினர் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சரத்துகளை இணை இயக்குநர் எம்.வி.கார்த்திகேயன் விளக்கினார்.
கொத்தடிமைத் தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமியும், வடக்கு மண்டல நன்னடத்தை அலுவலர் எம்.சரவணக்குமார், காவல் ஆய்வாளர் எஸ்.பிரபு ஆகியோர் ஆள்டத்தல் தடுப்பு சட்டம் மற்றும் சிறார் நீதி சட்டம் ஆகியவை குறித்து பேசினர். வெளிமாநில தொழிலாளர் சட்டம் குறித்து இணை இயக்குநர் சி.ஜெயக்குமார் விளக்கினார்.
120 நிறுவன பிரதிநிதிகள்: இப்பயிற்சி முகாமில் 120 தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இம்முகாமில் சென்னை மண்டல கூடுதல் இயக்குநர் பிரேமகுமாரி, இணை இயக்குநர்கள், துணை இயக்கு நர்கள், உதவி இயக்குநர்கள் பங்கேற்றனர்.