சென்னை: வேளச்சேரி பறக்கும் ரயில் நிலைய பார்க்கிங் பகுதியில் மேற்கூரை வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மழை, வெயிலில் பாதிக்கப்பட்டு பழுதடைகின்றன. இந்தவாகன நிறுத்தத்தில் மேற்கூரைகள் அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடமானது தலைநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 150 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சுமார் ஒரு லட்சம் பேர் வரை நாள்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.
வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட அந்த பகுதிகளைச் சுற்றியுள்ள ஏராளமான பயணிகள் தங்கள் இருசக்கர வாகனங்களில் இங்கு வந்து, நிலையத்தில் வானகத்தை நிறுத்திவிட்டு பின்னர் மின்சார ரயிலில் பயணிக்கின்றனர்.
இந்த வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி செல்லும் வகையில், வேளச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கு, தென் பகுதியில் தலா ஒரு வாகன நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளது. இவற்றில், தென் பகுதியில் வாகன நிறுத்தத்தில் மேற்கூரைகள் இல்லாமல் வாகனங்கள்மழை, வெயிலில் பாதிக்கப்பட்டு, பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐடி ஊழியர் சந்திரமோகன் கூறும்போது,‘‘ரயில் நிலையத்தில் பயணிகளின் வாகனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பார்க்கிங் இருக்க வேண்டும். வங்கிகளில் கடன் வாங்கித்தான் வாகனங்களை வாங்கியுள்ளோம். எனவே, கடும் வெயில், கனமழை காலத்தில் இருசக்கர வாகனங்கள் கிடந்து சேதமடைவதை தடுக்கவாகன நிறுத்ததில் மேற்கூரை அமைத்து, சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.
வங்கி ஊழியர் கிருஷ்ணன் கூறும்போது, ‘‘தென்பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் பெரும்பாலும் மண்தரையே உள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குவதால் அந்த இடமே சேறும், சகதியுமாக மாறி வாகனங்கள் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
அதை சுற்றி புதர்கள், செடிகள் அடர்ந்துள்ளதால் சில நேரங்களில் பாம்புகள் உட்பட விஷப் பூச்சி வாகனங்களில் புகுந்துவிடுகிறது. இதை ஒப்பந்தாரர்களிடம் கூறினாலும் அவர்கள் உரிய பணிகளை முன்னெடுப்பதில்லை. மின் விளக்கு வசதிகளும் இல்லை. போதியளவு இடவசதியும் இல்லாததால் நெரிசல் மிகுந்துள்ளது’’என்றார்.
இதுகுறித்து சென்னை கோட்டரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வாகன நிறுத்தமிடத்தை டெண்டர் எடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சில விதிமுறைகளை ரயில்வே நிர்வாகம் வகுத்துள்ளது. அதில், வாகன நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைப்பது, கண்காணிப்பு கேமரா பொறுத்துவது, வாகனங்களை பாதுகாப்பது போன்ற விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
விதிமுறைகளை முறையாகபின்பற்றாத தனியார் நிறுவனங்களில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அந்தவகையில் வேளச்சேரி ரயில்நிலையத்தின் வடபகுதியில் வாகன நிறுத்தமிடத்தில் மேற்கூரை இருக்கிறது. தென்பகுதியில் வாகன நிறுத்தமிடத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றனர்.
கோயம்பேடு மெட்ரோ நிலையம்: இதேபோல் சென்னை கோயம்பேடு மெட்ரோ நிலையத்திலும் வானகங்கள் வெட்டவெளியில் பாதுகாப்பின்றி நிறுத்தும் வகையில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்துக்கு அதிக அளவிலான பயணிகள் வருவதால் இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் மூலம் அதிக வருவானமும் வருகிறது.
அதிக இடங்களை விரிவுபடுத்த கவனம் செலுத்தும் நிர்வாகம் வண்டிகளில் பாதுகாப்பையும் நினைவில் கொள்ள வேண்டும். மழை, வெயில் என வானமே கூரையாக காட்சியளிக்கிறது. இங்கும் நிழற்கூரை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.