தமிழகம்

மருந்தாளுநர் பட்டம் படிக்காதவர் தரக்கட்டுப்பாடு இயக்குநராக நியமனம் - மருந்து வணிகர்கள் கவலை

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: மருந்துகள் மற்றும் அழகு சாதனபொருட்கள் சட்டம் 1948-ன்படி, மருந்தாளுநர் பட்டப்படிப்பு படித்தவர்களை மட்டுமே மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநராக நியமிக்க முடியும். மருந்துகளுக்கான உரிமம் வழங்குதல், மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மருந்துகளை கையாளத் தெரிந்த படிப்பு படித்த நபரால் மட்டுமே செய்ய முடியும் என்பதால், இத்தகைய சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரி தான், மருந்துகள் ஏற்றுமதிக்கான அனுமதியையும் வழங்க முடியும். இந்நிலையில், மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு பொறுப்பு இயக்குநராக இருந்த விஜய லட்சுமி கடந்த மே முதல் வாரம் ஓய்வு பெற்ற நிலையில், இதே துறையில் இணை இயக்குநராக இருந்த எம்.என்.ஸ்ரீதர், பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின், மே 16-ம் தேதி, அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரியான உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் மருந்தாளுநர் பட்டப் படிப்பு கல்வித் தகுதி பெறாத நிலையில், புதிய மருந்துகளுக்கான உரிமம் வழங்குவதற்கோ, தமிழகத்தில் உற்பத்தி செய்யும் மருந்துகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கவோ கையெழுத்திட முடியாத நிலை உள்ளது.

மேலும், மருந்து கம்பெனிகளின் உரிமமும் புதுப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதே நிலை நீடித்தால், விற்பனையில் உள்ள பல மருந்து நிறுவனங்களின் உரிமம் பெற்றுள்ளதற்கான காலக்கெடு முடிவடைந்த பின், அந்த நிறுவனங்கள் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படவாய்ப்புள்ளது என மருந்து வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் சீனிவாசா ராமச்சந்திரன் கூறியதாவது: மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும், மருந்துகள் குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, சட்ட விதியும் இடம் கொடுக்கவில்லை என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், ஏற்றுமதி பாதிப்பதன் மூலம் அந்நிய செலாவணியும் பாதிக்கும். அத்துடன், உரிமம் தேதி முடிவடையும் நிலையில் உள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களை மீண்டும் தயாரிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், மருந்துகள் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு மனு அனுப்பியுள்ளோம். உரிய சட்ட வழிகளை பின்பற்றி மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT