தமிழகம்

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் தனுஷ், நாசர் உள்ளிட்ட 21 பேருக்கு ‘மகுடம்’ விருது: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கினார்

செய்திப்பிரிவு

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பில் நடிகர்கள் தனுஷ், நாசர் உள்ளிட்ட 21 பேருக்கு ‘மகுடம்’ விருதை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னையில் நேற்று வழங்கினார்.

நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் விளையாட்டு, சமூக சேவை, வணிகம், அறிவியல் தொழில்நுட்பம், கலை இலக்கியம், திரைத்துறை ஆகிய 6 துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ‘மகுடம்’ விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் வெங்கய்ய நாயுடு பங்கேற்று ‘மகுடம்’ விருதை வழங்கினார். இதில் நடிகர் நாசருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, தடகள வீரர்கள் லட்சுமணன், ஆரோக்கியராஜ், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட 21 பேருக்கு ‘மகுடம்’ விருது வழங்கப்பட்டது.

விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: சுதந்திரத்துக்கு பிறகு, இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பண்டைய காலம் தொட்டே, மொழி, கலாச்சாரம், கலை இலக்கியத்தில் சிறந்து விளங்கி வருகிறது. தமிழக மக்கள் இயல்பாகவே கடுமையாக உழைக்கக் கூடியவர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி இளம் வயதில், டீ கடையில் டீ பரிமாறியவர்தான். அதனால் நாம் இளம் வயதில் கடுமையாக உழைத்தால், பிற்காலத்தில் உயர் பதவியை அடைய முடியும்.

அங்கீகரிக்கப்படாதவர்களை கண்டுபிடித்து அங்கீகரியுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிவருகிறார். அதைதான் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்துள்ளது. இந்நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன். மற்றவர் மனதில் சாதிக்கும் ஆர்வத்தை தூண்டுவதற்காக தான், இங்கு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் தாய்மொழியை மறந்துவிடக்கூடாது என்றார்.

விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, நீதிபதி கிருபாகரன், அமைச்சர்கள் பி.ஜெயகுமார், கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, சகாயம் ஐஏஎஸ், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன், நடிகை குஷ்பு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் எம்.குணசேகரன் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT