சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஆபத்தான முறையில் எரிவாயு சிலிண்டரை பற்றவைக்க முயன்ற கிராம மக்களை பெண் எஸ்ஐ தடுத்து நிறுத்தினார்.
இளையான்குடி அருகே இ.சுந்தனேந்தலில் 120 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்துக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரே ஒரு பொதுக்குழாய் மூலம் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஒரு குடும்பத்துக்கு ஒரு குடம் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
இதையடுத்து அவர்கள் கண்மாய், குளங்களில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இக்கிராமத்துக்கு குறைந்தழுத்த மின்சாரமே விநியோகிக்கப்படுகிறது. இதனால் மின் சாதனங்களை பயன்படுத்த முடியவில்லை. கண்மாய் மடைகள் சேதமடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறிவிடுவதால் விவசாயம் செய்ய முடியவில்லை.
இதுகுறித்து அவர்கள் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து அக்கிராம மக்கள் நேற்று எரிவாயு சிலிண்டர், அடுப்பு, குடங்கள், அரிசி, காய்கறிகளுடன் வந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் திடீரென ஆபத்தான முறையில் எரிவாயு சிலிண்டரை பற்ற வைக்க முயன்றனர். இதை பார்த்த பெண் எஸ்ஐ கவுரி விரைந்து செயல்பட்டு அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் அங்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குநர் குமார், வட்டாட்சியர் பாலகுரு ஆகியோர் கிராம மக்களை சமரசப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.