தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை குறுவை சாகுபடி தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் .ஆர் .கே. பன்னீர்செல்வம் . | படங்கள் ஆர். வெங்கடேஷ் 
தமிழகம்

வரலாறு காணாத மகசூல்: தஞ்சையில் விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கினை கர்நாடகத்தில் இருந்து பெற்று தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக விவசாயிகளிடமிருந்து கருத்துக்களை கேட்கும் கூட்டம் தஞ்சாவூரில் இன்று (ஜூன் 8-ம் தேதி) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வரவேற்று கூறியதாவது, " தஞ்சாவூர் மாவட்டத்தில் வழக்கமாக ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே 24ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளதாலும், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை அமுல்படுத்தப்பட்டதாலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சாகுபடியின் பரப்பளவு 1,82,040 ஏக்கருக்கு கூடியது.

இதனால் 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வகையில் மகசூலும் அதிகரித்தது. அதேபோல் நிகழாண்டும் குறுவை சாகுபடி 2 லட்சம் ஏக்கர் அளவுக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதற்கு தேவையான விதைகள், உரங்கள் அனைத்தும் தேவையான அளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பேசியதாவது, "குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவை, அதேபோல் விவசாயிகளின் பிரச்சனைகள் என்னென்ன என்பதை தெரிந்து அதனை தீர்த்து வைக்கும் விதமாக கடந்த இரு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு முன்பாக ஆய்வு கூட்டம் விவசாயிகளைக் கொண்டு நடத்தப்பட்டது.

அதேபோல் மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் இக்கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் சாகுபடிக்கு தேவையான வசதிகள் குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை தொடர்புடைய கூட்டுறவு, வேளாண்மை, நுகர்பொருள் வாணிபக் கழக துறைகளைச் சார்ந்த அதிகாரிகளை கொண்டு அந்த துறை சார்ந்த குறைகளை தீர்த்து வைக்கும் விதமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது" என்றார்.

கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே .ஆர். பெரிய கருப்பன், அரசு கொறடா கோழி .செழியன், எம்பிக்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் மற்றும் எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள், வேளாண் துறை ஆணையர் சுப்பிரமணியன், சர்க்கரை துறை ஆணையர் விஜய ராஜ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என். சுப்பையன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது. குறுவை சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் கடன் வழங்க வேண்டும். அதேபோல் தேவையான அளவு விதைகள், உரங்கள் ஆகியவற்றை அதிக அளவில் இருப்பு வைத்து விநியோகம் செய்ய வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படவில்லை குறுவைக்கு அந்த பயிர் காப்பீடு திட்டத்தை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கினை கர்நாடகத்தில் இருந்து பெற்று தர வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளின் அளவை 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர்.

SCROLL FOR NEXT