சென்னை: ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அம்பத்தூர் ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது வேண்டும் என்றே ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்நோக்கத்தில் சித்தரிக்கப்பட்ட செய்தியாகும். இச்செயலைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் மீது குழந்தைகள் உரிமை பாதுகாப்புக் குழு மூலம் உரியநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தவறான செய்தியைச் சித்தரித்து வழங்கிய ஊடகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கச் சட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தடைச்சட்டம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், 14 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறார்களை பணியமர்த்தக்கூடாது. ஆவின் அலுவலகங்களில் சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆட்சியர், காவல் துறை மூலம் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவணங்களையும் சரிபார்த்துள் ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஓபிஎஸ், அன்புமணி அறிக்கை: முன்னதாக, சென்னை, அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட சிறார் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், சிறார்கள் ஐஸ்கிரிம் பேக்கிங் பிரிவில் பணியாற்றியது தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்திலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது கடும் கண்டனத்துக்குரியது.
ஆவின் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் குழந்தைத் தொழிலாளர்களைக் கண்டறிந்து, அவர்களைபள்ளிகளில் சேர்க்க வேண்டும். இவர்களை பணியமர்த்திய நிறுவனம் மீது முதல்வர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், ``ஆவின் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதற்குக் காரணமானவர்கள் யார்?என்பதைக் கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவை அனைத்துக்கும் மேலாக, அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் குத்தகைத் தொழிலாளர் முறையை உடனடியாக ரத்து செய்ய அரசு முன்வர வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.