திருப்பூர் வெங்கமேடு பகுதியில் சாய ஆலையிலிருந்து வெளியேறிய விஷ வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள். 
தமிழகம்

திருப்பூர் வெங்கமேடு சாய ஆலையில் விஷவாயு கசிவு - 40 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் சாய ஆலையில் இருந்து வெளியேறிய விஷ வாயுவால் குழந்தைகள் உள்ளிட்டோர் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளானதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் செயல்பட்டு வரும் சாய ஆலையில் இருந்து நேற்று முன்தினம் இரவு விஷவாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதை சுவாசித்த 40 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் அப்பகுதியில், உடல் உபாதைக்கு உள்ளான குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர்உள்ளிட்டோர் ஆலையில் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து பவன்குமார் கிரியப்பனவர் கூறியதாவது: 17 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இங்கு வசிக்கும் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆலையின் கழிவு நீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆய்வு முடிவு வரும் வரை ஆலையை இயக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT