தமிழகம்

ஆவின் பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: ஆவின் பால் கொள்முதல் அளவை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்றுகூறியதாவது:

சேமநல நிதி, இஎஸ்ஐ: ஆவின் நிறுவனத்தில் நிர்வாகப் பணிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ‘தொழிலாளர் நல சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஊழியர்களை ஒப்பந்ததாரர்கள் பணியமர்த்த வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள ஊதியம், சேமநல நிதி, இஎஸ்ஐஆகியவை முறையாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அவரவர் வங்கி கணக்குகளில்ஊதியம் செலுத்தப்பட வேண்டும்’என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.

வேலூரில் ஆவின் பால் எடுத்துச் சென்ற வாகனங்களை பரிசோதித்தபோது, ஒரே பதிவு எண்ணில் 2 வாகனங்கள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறை மூலமாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2 லட்சம் கறவை மாடுகள்: ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொள்முதலை அதிகரிக்க 2 லட்சம் கறவை மாடு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளோம். பால் கையாளும் திறனை 45 லட்சம் லிட்டரில்இருந்து 75 லட்சம் லிட்டராக அதிகரிக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். மாட்டுத் தீவனங்களை முழுமையாக வழங்க, உடனடியாக மாட்டுத்தீவன மையங்கள் நிறுவப்படும்.

ஒவ்வொரு சீசனுக்கும் பால் கொள்முதல் அளவு வேறுபடும். எனவே, அமுல் நிறுவனத்தின் வருகையால் குறிப்பிட்ட மாவட்டங்களில் பால் கொள்முதல் குறைந்துள்ளது என்பது சரியான தகவல் அல்ல. வடதமிழகத்தில் அமுல் நிறுவனத்தின் பால் கொள்முதல் அவ்வளவு பெரிய சவாலான விஷயமாக தெரியவில்லை.

வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆவின் நிர்வாக மேலாளர் ஆய்வு செய்துள்ளார். அங்கு ஆவின் நிறுவனத்துக்கு கிடைக்கும் பால் அளவு குறையவில்லை. நானும் அங்கு ஆய்வு செய்ய உள்ளேன். ஆவினின் ஸ்திரத்தன்மை, சேவையை தமிழக பால் உற்பத்தியாளர்கள் நம்புகிறார்கள். இதை விரிவுபடுத்த முயற்சி எடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT