சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, கிண்டிநெடுஞ்சாலை ஆராய்ச்சி நிறுவனவளாகத்தில் மரக்கன்றை நட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும் ’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். அவரது சொல்லிற்கிணங்க கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்ற இலக்கு எட்டப்படும் என்று இந்த 2023-24-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கிணங்க, கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கத்தை முன்னிட்டு நேற்று ஜூன் 7-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, மரக்கன்று ஒன்றை நட்டுத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, நேற்றுமுதல் தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையின் 340 சாலைகளில் மரம் நடும்பணி தொடங்கியது. இவ்வாறு நடப்பட உள்ள மகிழம்,வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சேர்ந்த 46,410 மரக்கன்றுகள், 24 மாதம் வளர்ச்சி கொண்டவை யாகும். பருவமழைக்கு முன்னரே 5 லட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப் பாண்டியன், சென்னை துணைமேயர் மு.மகேஷ்குமார், நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் சங்கத்தின் தலைவர் சு.கண்ணன், பொதுச்செயலாளர் ஆர்.தீபக், பொருளாளர் போ.அருண் பிரசாத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.