ஆவடி: திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த மரத்துண்டு ரயில் இன்ஜினில் சிக்கியது. இதனால் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் நாள்தோறும் பல விரைவு, மின்சார ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலை ஓட்டுநர் மதியழகன் ஓட்டி சென்றார். அந்த ரயில் திருநின்றவூர் - நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, ரயில் தண்டவாளத்தில் 5 அடி நீளமுள்ள தென்னை மரத்துண்டு ஒன்று கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுநர் மதியழகன் ரயில் இன்ஜினை நிறுத்த முயன்றார். அதற்குள் மரத்துண்டு ரயில் இன்ஜின் சக்கரத்தில் சிக்கியது.
தொடர்ந்து, ரயிலை நிறுத்திய ஓட்டுநர் மரத் துண்டை சக்கரத்திலிருந்து அகற்றினார். பிறகு அந்த மரத் துண்டை, ஆவடி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில், அண்ணனூர் ரயில்வே பாதுகாப்பு படையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ‘திருநின்றவூர், நேரு நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், வீட்டில் உள்ள மரத்தை துண்டு துண்டாக வெட்டி ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள காலி இடத்தில் போட்டுவிட்டு சென்றதும், அதில் ஒரு மரத்துண்டை நள்ளிரவில் ரயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் போட்டு சென்றதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னை ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அவர்கள், ரயில் தண்டவாளத்தில் மரத்துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.