தமிழகம்

எண்ணூர் முதல் முட்டுக்காடு வரை கால்வாயை தூர்வாரி இருந்தால் சென்னையில் எங்குமே மழைநீர் தேங்கி இருக்காது: மு.க.ஸ்டாலின்

செய்திப்பிரிவு

எண்ணூரில் இருந்து முட்டுக்காடு வரையில், ஏறக்குறைய 49 கிலோமீட்டர் உள்ள கால்வாயை தூர்வாரி இருந்தால், சென்னை மாநகரில் எந்தவொரு இடத்திலும் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (31-10-2017) கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

திருவிக நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், அன்னை சத்யா நகரில் உள்ள விநாயகர் கோயில் தெரு ஓடை, வார்டு எண் 64க்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஓடை, ரெட்டேரி ஓடை அம்பேத்கர் நகர் பிரதான சாலை ஓடை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

இதனையடுத்து, கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 'எண்ணூரில் இருந்து முட்டுக்காடு வரையில், ஏறக்குறைய 49 கிலோமீட்டர் உள்ள கால்வாயை தூர்வாரி இருந்தால், சென்னை மாநகரில் எந்தவொரு இடத்திலும் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், ‘குதிரை பேர’ அதனை மேற்கொள்ளவில்லை. அந்தக் கால்வாய் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ‘குதிரை பேர’ ஆட்சியின் முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தான் அந்தத் துறை செயல்படுகிறது. ஆனால், இதுபற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை.

எனவே, கொளத்தூர் தொகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மழை பெய்தால் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமென்று ஆய்வு செய்து, ஏற்கனவே அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து சொல்லியிருக்கிறோம். அதேபோல, கடந்த டிசம்பர் மாதம், வர்தா புயல் வந்த நேரத்தில், பெருமழை பெய்த நேரத்தில் பம்பிங் ஸ்டேஷன் அதாவது கழிவுநீர் உந்து நிலையம் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. எனவே, இம்முறை அப்படிப்பட்ட நிலை ஏற்படக்கூடாது என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன்.

அதேபோல, பல்வேறு பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு வந்தேன். அதுமட்டுமல்ல, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளை எல்லாம் அழைத்து, ஆலோசனை மேற்கொண்டு, மாநகராட்சி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளை நிறைவேற்ற அனைவரும் பக்கபலமாக இருந்து துணை நிற்க வேண்டும் என்றும் அதேபோல, மக்களுடைய பிரச்னைகளை அறிந்து உடனுக்குடன் அவற்றை போக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தாம்பரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் ஒருநாள் பெய்த மழைக்கே மக்கள் எல்லாம் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த டிசம்பர் மாத மழையின் போதும், வர்தா புயலின்போதும் இந்த நிலை ஏற்பட்டது. அதன் பிறகாவது அந்தப் பகுதிகளில் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால், இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், பெரும்பான்மையை இழந்துவிட்ட இந்த ‘குதிரை பேர’ ஆட்சிக்கு அதுபற்றியெல்லாம் கவலை இல்லை. தங்களுடைய ஆட்சியை எப்படி தக்கவைத்துக் கொள்வது, எம்.எல்.ஏ.க்களை எப்படி சரி செய்வது, அமைச்சர்களை வேறு அணிகளுக்கு சென்று விடாமல் தடுத்தி நிறுத்தி வைப்பது, அதற்கு எவ்வளவு கமிஷன் கொடுப்பது என்ற கவலையில் மட்டும் தான் இந்த ஆட்சி இருக்கிறது.

சென்னை மாநகரம் மட்டுமல்ல, சென்னை புறநகர் மற்றும் சுற்றியிருக்கும் மாவட்ட மக்களும் செம்பரம்பாக்கம் வெள்ளத்தால் எந்தளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும். இந்த அரசுக்கும் அது தெரியும். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால்தான் இன்றைக்கு மக்கள் அச்சமடைந்து இருக்கின்றனர். எனவே தான், இந்த அரசை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை, திமுகவினர் பேரிடர் வந்தால் சமாளிக்க தயாராக இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று நான் அறிக்கை வெளியிட்டேன். அதன்படி, திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் மற்ற திமுக நிர்வாகிகளும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT