கொச்சி: பாஜக முன்னாள் ராஜ்ய சபா எம்பியும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி புகாரின் பேரில் கொச்சியில் தமிழக லாரி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மலையாள நடிகர் கொல்லம் சுதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்றுவிட்டு நடிகர் சுரேஷ் கோபி நேற்று அதிகாலை வீடு திரும்பி கொண்டிருக்கையில், அவரின் வாகனத்துக்கு இடையூறு செய்ததாக, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பரத் என்பவர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சி அருகே சென்றுக் கொண்டிருக்கும்போது நடிகர் சுரேஷ் கோபியின் காரை முந்தவிடாமல் வழிமறுத்த ஓட்டுநர் பரத், தனது லாரியை ஆபத்து விளைவிக்கும் வகையில் ஓட்டியாக சொல்லப்படுகிறது. இதையடுத்து காரில் இருந்தபடியே, போலீஸை அழைத்து சுரேஷ் கோபி புகார் தெரிவிக்க, அங்கமாலி அருகே லாரியை தடுத்து நிறுத்திய கேரள போலீஸார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் ஆபத்தான முறையில் வாகனம் ஒட்டியதாக, டிரைவர் பரத்தை கைது செய்ததுடன், லாரியையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனிடையே, டிரைவர் பரத் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்துள்ள கேரள போலீஸார், அவர்மீது வழக்கு பதிந்து கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.