சுரங்கம் தோண்டும் பணி நிறைவு 
தமிழகம்

2-ம் கட்ட சென்னை மெட்ரோ: மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு

கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: 2-வது கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ளது. மயிலாப்பூர் நிலையம் 3-வது மற்றும் 4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும். 4 நிலைகளுடன் தரைக்குக் கீழே 35 மீ (115 அடி) ஆழத்தில் இந்த நிலையம் அமையவுள்ளது. இந்த நிலையத்தில் 4 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆனை மலை சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவரம் பால் பண்னையில் இருந்து கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. இதன்படி, 415 மீட்டம் சுரங்கம் தோண்டும் பணியை முடித்து இன்று வேணுகோபால் நகரை வந்து அடைந்தது.

இது போன்று சேர்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மாதவம் பால் பண்ணையில் கடந்த மே மாதம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது. 50 மீட்டர் சுரங்கப் பணியை முடித்து ஆகஸ்டு 25-ம் தேதி வேணுகோபால் நகரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT