தமிழகம்

கோயில் நிலத்தை உயர் நீதிமன்றத்துக்கு விற்றால் மிகப் பெரிய போராட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை

கி.மகாராஜன்

மதுரை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு, அதன் எதிரில் உள்ள கோயில் நிலத்தை விற்கக் கூடாது. விற்றால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

அவர் திருப்பரங்குன்றத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு முன் பகுதியில் உள்ள பல ஏக்கர் கோயில் நிலத்தை நீதிமன்ற பயன்பாட்டுக்கு குத்தகைக்கு கேட்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை நீதிமன்றத்துக்கு விற்பதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், கோயில் நிலங்களை எந்த பொது பயன்பாட்டுக்காகவும் விற்பனை செய்யக் கூடாது என உயர் நீதிமன்ற அமர்வு 2018 மற்றும் 2021-ல் தீர்ப்பளித்துள்ளது.

கோயில் நிலத்தை உயர் நீதிமன்றத்துக்கு விற்பனை செய்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிலங்களையும் விற்பனை செய்யலாம் என நினைக்கின்றனர். கோயில் சொத்துகளை விற்பனை செய்வது, கோயில் நகைகளை உருக்குவது, உண்டியல் பணத்தை கொள்ளையடிப்பது போன்ற நோக்கத்துடன் தமிழக முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் செயல்பட்டு வருகின்றனர்.

கோயில் நிலத்தை விற்க அறநிலையத் துறைக்கு உரிமையில்லை. அதை மீறி கோயில் நிலங்களை விற்பனை செய்தால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 150 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால் உயர் நீதிமன்றத்துக்கு மேலும் நிலம் தேவையில்லை.

ஒடிசா ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை. ரயில் நிலைய மேலாளர் தலைமறைவாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு டயர்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி நடைபெற்றுள்ளது. இதனால் சதி வேலைக்கு வாய்ப்புள்ளது. அது சிபிஐ விசாரணையில் தான் உறுதிபட தெரியும்.

மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக கோருவதற்கு திருமாவளவனுக்கு உரிமையில்லை. விஷச் சாராயம் குடித்து 22 பேர் இறந்ததற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என கேட்காத அவர், ரயில் விபத்து வழக்கில் வாய் திறக்கக் கூடாது.

மதுரையில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களை என்ஐஏ கைது செய்துள்ளது. ஆளுநரை விமர்சிப்பது சரியல்ல. அவர் துணை வேந்தர்களிடம் தான் பேசினார். சாலையில் செல்வோரை அழைத்து பேசவில்லை. சீனா நிறுவனங்கள் இந்தியா வர விரும்புகின்றன. அதற்கு வீணாக நேரில் சென்று அழைக்க வேண்டாம் என்று தான் கூறியுள்ளார். இதனால் பொன்முடி, வைகோ போன்றவர்கள் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT