தமிழகம்

ரயில்வே அமைச்சர் பதவி விலகாவிட்டால் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு வாரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பின்போது வைணவ ஆதீனங்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் ஆகியோரின் பிரதிநிதிகள் ஏன் அழைக்கப்படவில்லை. ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் ஒரு வாரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மன்னர் ஆட்சி முடிந்துவிட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அது ஏற்புடையதல்ல. செங்கோல் அரசியல், கர்நாடக மாநில தேர்தல்போல பாஜகவுக்கு தோல்வியைத் தான் தரும். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

முன்னதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் கலவரத்துக்கு பாஜகவின்மதவாத அரசியலே காரணம். அங்கு இன அழிப்பு நடைபெறுகிறது. இணையதளம், தொலைபேசி வசதிஇல்லை. 40 ஆயிரம் பேர் காட்டுக்குள் சென்றுவிட்டனர். மணிப்பூர் மக்களுக்கு காவல்துறையினர், ராணுவம் என யார் மீதும் நம்பிக்கை இல்லை. நவீன உலகில் எங்கும் நடக்காத கொடுமை அங்கு நடக்கிறது.

மத்திய அரசுக்கு 3 கேள்விகள்: மணிப்பூரில் 292 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எத்தனை முகாம்களை அரசு நடத்துகிறது? கிராமங்களில் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. அங்கு வசித்தவர்கள் தொடர்பானஆவணங்கள் உள்ளனவா? மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை காவல்துறையினர் கவனிக்கிறார்களா அல்லது ராணுவம் கவனிக்கிறதா?

இந்த 3 கேள்விகளுக்கு மத்தியஅரசு பதில் அளிக்க வேண்டும். மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. அங்குநடைபெறும் கலவரத்தை அரசுகண்டு கொள்ளவில்லை. இது மக்களுக்கான அரசியல் அல்ல. மக்களிடம் விரோதத்தை வளர்க்கும் அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT