தமிழகம்

21 நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜூன் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் அபராத நடைமுறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜூன் 30-ம்தேதி முதல் வாகனங்களை இயக்க மாட்டோம். காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

அனைத்து லாரி உரிமையாளர்கள் சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் தலைவர் கோபால் நாயுடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சி.தனராஜ், புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செந்தில்,தமிழ்நாடு மணல் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் உள்ளிட்ட முக்கியநிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக் கண்ணனும் பங்கேற்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதன்பின், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:

ஆன்லைன் அபராதத்தை உரியஆவணங்களுடன் விதிக்க வேண்டும். மேலும் அதிக பாரம் ஏற்றுவதற்கான அபராத சட்டத்தை தவறாகப்பயன்படுத்தக் கூடாது. நலவாரியம் அமைக்க வேண்டும். எஃப்சி ஸ்டிக்கரை முறைப்படுத்த வேண்டும்என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை பல ஆண்டுகளாக முன்வைத்து வருகிறோம்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேசி, 21 நாட்களுக்குள்தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையைத் தவிர்த்து, அனைத்து வாகனங்களும் ஜூன் 30 முதல் இயங்காது. காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT