தமிழகம்

கேரள வனத்தில் அரிசி கொம்பனை விடும் கோரிக்கை நிராகரிப்பு - மனுவை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை/நாகர்கோவில்: அரிசிக் கொம்பன் யானையை, கேரள வனப்பகுதியில் விடும் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதேநேரம், களக்காடு முண்டந்துறையில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்ல வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கேரள அரசு அரிசிக் கொம்பன் யானையை கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்றதால், அதை பரம்பிக்குளம் புலிகள் சரணாலயப் பகுதியில் விட முடிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் கம்பம் பகுதியில் யானை நுழைந்தது.

சின்னக்கானல் வனப்பகுதியில் வலசை பாதையை ஆக்கிரமித்து ரிசார்ட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் யானைகள் மக்கள் வசிக்கும் இடங்களுக்குள் நுழைகின்றன. அரிசிக் கொம்பனை கடவுளின் குழந்தையாக பழங்குடியினர் பார்க்கின்றனர். இதனால் அந்த யானையை, மீண்டும் அதே பகுதியில் விட வேண்டும்.

எனவே கேரளாவில் உள்ள மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா அல்லது சின்னக்கானல் பகுதியில் விடவும், அதன் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவக்குழு அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், ‘இந்த மனு விளம்பர நோக்கில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. தமிழக அரசு மிகுந்த சிரமப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவிட்டு அரிசிக் கொம்பனை பிடித்துள்ளது. ஒரு யானையை எங்கு விட வேண்டும் என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது.

யானைகள் எங்கு வாழ வேண்டும் என்பதை வனத்துறைதான் முடிவு செய்யும். மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு யானைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.

கேரள பகுதியில் நுழைய வாய்ப்பு: இதற்கிடையே, குமரி வனப்பகுதியில் அரிசிக் கொம்பன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியான மேல் கோதையாறு பகுதியில் அரிசிக் கொம்பன் யானையை நேற்று முன்தினம் வனத்துறையினர் விடுவித்தனர்.

அந்த இடம் அருகே கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்ட முத்துக்குழி வனப்பகுதியில் உள்ளது. மேற்குதொடர்ச்சி மலை வழியாக அரிசிக்கொம்பன் யானை பேச்சிப்பாறை, சிற்றாறு, களியல் உள்ளிட்ட குமரி மாவட்ட வனப்பகுதிக்குள் வர வாய்ப்புள்ளது என்பதால், அங்கு வசிக்கும் பழங்குடி காணியினத்தவர்கள் உள்ளிட்ட மலைவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறும்போது, ‘‘அரிசிக் கொம்பன் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க அதன் கழுத்தில் `ரேடியோ காலர்` என்னும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனை வைத்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை யானையின் இருப்பிடத்தை தோராயமாக அறிய முடியும். ஆனால் துல்லியமாக அறிந்து கொள்வதற்கான தொழில் நுட்பம் குமரி வனத்துறையிடம் இல்லை. அரிசிக் கொம்பன் யானை, முத்துக்குழிவயல், நெய்யாற்றின்கரை வழியாக கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்ல வாய்ப்புள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT