சேலம்: சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (70). விசைத்தறித் தொழிலாளி. இவர் நேற்று காலை இருசக்கர வாகனத்தில் மனைவி மாரியம்மாள் (60), மகள் பூங்கொடி (27) ஆகியோருடன் உத்தமசோழபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
பின்னர், கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாள், பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த வெங்கடாசலத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கல்பாரப்பட்டி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.