கடலூர்: கடலூரில் பலத்த சூறைக்காற்று வீசியதால் 1,000 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தன. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் ராமாபுரம், ஒதியடிகுப்பம், கீரப்பாளையம், வழிசோதனைபாளையம் எம்.புதூர், வெள்ளக்கரை, கொடுக்கன்பாளையம், குமளங்குளம், புலியூர், சத்திரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,000 ஏக்கருக்கும் கூடுதலாக பயிரிடப்பட்டிருந்த பல்வேறு வகையான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இவை அனைத்தும் ஆடி மாதத்தில் அறுவடை செய்யும் வகையில் சாகுபடி செய்யப்பட்டவையாகும்.
இதுகுறித்து ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், “கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிரிட்டு வருகிறோம். கடந்த ஜூலை மாதம் வாழை பயிரிடப்பட்டு தற்போது மரமாக வளர்ந்து ஒவ்வொரு மரத்திலும் வாழைத்தார்கள் குலை தள்ளி உள்ளன. இந்த வாழை மரங்களை சுமார் 10 மாதம் வெயில், மழை பாராமல் பாதுகாத்து வந்தோம். வருகின்ற ஜூலை மாதம் அறுவடை செய்ய இருந்தோம். லட்சக்கணத்தில் செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றால் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. வாழை மரங்கள் அனைத்தும் முறிந்துவிழுந்து வீணாகி குப்பையில் கொட்டக்கூடிய நிலையில் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் அனைத்து பாதிக்கப்பட்ட நிலங்களை அளவீடு செய்து உரிய முறையில் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் நேற்று தனித்தனி இருசக்கர வாகனங்களில் ஒதியடிகுப்பம், வெள்ளக்கரை, கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை பார்வை யிட்டனர். எஸ்பி. ராஜாராம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் (பொறுப்பு) அருண் மற்றும் வருவாய், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 2,370 ஏக்கர் (948 ஹெக்டேர்) வாழைகள் சேதமடைந்துள்ளன. 1,109 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதம் குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பாதிப்பு விவரம் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.