சென்னை: வழக்கு விவரங்கள் தெரிந்த போலீஸாரை மட்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க டிஜிபிக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின்போது வழக்கு தொடர்பான விவரங்களை நீதிமன்றத்துக்கு தெரிவிப்பதற்காக ஆஜராகியிருந்த கோவை வடவள்ளி காவல்நிலைய காவலர் ஒருவர், அந்த வழக்கின் சாராம்சமே தெரியாமல் முறையான தகவல்களை தெரிவிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்.
அதையடுத்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘‘வழக்கு விவரங்கள் தெரிந்த போலீஸாரை மட்டுமே உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தியும் தமிழக காவல்துறை வழக்குக்கு தொடர்பு இல்லாத போலீஸாரை நீதிமன்ற பணிக்காக அனுப்பி வைக்கிறது. இதனால் நீதிமன்ற நேரம்தான் வீணாகிறது’’ என கூறி அதிருப்தி தெரிவித்தார்.
பின்னர், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவிடம், வழக்கு பற்றிய விவரங்கள் தெரிந்த போலீஸார் அல்லது அதிகாரிகளை மட்டுமே உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக டிஜிபி-யிடம் அறிவுறுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்.