சேலம்: சேலம் மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஈரடுக்கு பேருந்து நிலையம், வணிக வளாகம் உள்ளிட்டவற்றுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், சூரமங்கலம் மண்டல குழுத் தலைவர் (திமுக) எஸ்.டி.கலையமுதன் பேசும்போது, ‘முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து வைக்கும் விழா சேலத்தில் எங்கு நடக்கிறது. ஏற்கெனவே, மேம்பால நகரில் விழா நடப்பதாக அறிவித்துவிட்டு, இப்போது இடத்தை மாற்றியுள்ளார்கள்,’ என்றார்.
மேயர் ராமச்சந்திரன் பேசும்போது, ‘ மாநகராட்சி 9-வது வார்டு வாய்க்கால்பட்டறை நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்,’ என்றார்.
மண்டல குழுத் தலைவர் கலையமுதன் பேசும் போது, ‘எனது வார்டில் நகர்ப்புற நல வாழ்வு மையத்துக்கான திட்டப்பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், அதனை திறப்பு விழா செய்வது சரியாக இருக்காது. திட்டப்பணி முடியாத நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டிடத்தை ‘மீடியாக்கள்’ படம் பிடித்து செய்தி வெளியிட்டால், ஆளும்கட்சிக்கு அவப்பெயர் ஏற்படாதா,’ என கேள்வி எழுப்பினார்.
மேயர் ராமச்சந்திரன், ‘இந்த அவசர கூட்டமானது, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை பேருந்து நிலையம், வணிக வளாகத்துக்கு வைப்பதற்காக கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் தேவையில்லாத வாதம் செய்வது சரியல்ல,’ என்றார்.
எஸ்.டி.கலையமுதன் கேள்வி எழுப்பியதற்கு, திமுக கவுன்சிலர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். மேயர் ராமச்சந்திரன் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறி சென்ற நிலையிலும், கலையமுதன் தொடர்ந்து பேசினார். மாமன்ற கூட்டத்தில் ஆளும் கட்சியினருக்குள் ஏற்பட்டுள்ள கருத்துவேற்றுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.