பல்லாவரம்: பல்லாவரம் அருகே கீழ்க்கட்டளை ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டி, கீழ்க்கட்டளை ஏரி உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
பல்லாவரம், நகராட்சியாக இருந்தபோது, உலக வங்கி நிதியுடன் பல்லாவரம், கீழ்க்கட்டளை ஏரிகளை புனரமைத்தனர். நாளடைவில் இரண்டு ஏரிகளிலும் மர்ம நபர்கள் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர், கட்டிடம் ஆகியவற்றை அமைத்தனர். கீழ்க்கட்டளை ஏரியில், ரேடியல் சாலையின் வடக்கு பகுதியில், 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, 200 லோடுக்கும் அதிகமாக மண்ணை கொட்டி மேடாக்கி, சுற்றி சுற்றுச்சுவர் கட்டும் பணியில் சிலர் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து, செங்கை ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் உத்தரவின் பேரில் வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் குறுக்கிட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. வருவாய், மாநகராட்சி அதிகாரிகள் சுற்றுச் சுவருக்காக போடப்பட்ட தூண்களை இடித்துவிட்டு, ஏரியில் கொட்டப்பட்டிருந்த, 200 லோடு மண்ணை தோண்டி எடுத்து, கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் கூறியதாவது: கீழ்க்கட்டளை ஏரியில், 5 ஏக்கர் நிலம் பல வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றை முழுவதுமாக மீட்டு, கரையை பலப்படுத்தி, ஏரியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மண் கொட்டப்பட்டுள்ள இடத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள கட்டிடமும் ஆக்கிரமிப்பு தான். அந்த கட்டிடமும் இடிக்கப்பட்டு, நிலம் மீட்கப்படும் என்றார்.