நாட்றாம்பள்ளி: வழக்கத்தை காட்டிலும் மின் கட்டணம் கூடுதலாக வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து, நாட்றாம் பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட மல்லப் பள்ளி, வெலக்கல் நத்தம், சந்திரபுரம் ஆகிய ஊராட்சி களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
இந்நிலையில், 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் குறித்து கணக்கீடு செய்ய வரும் மின்வாரிய ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 ஊராட்சிகளில் வீடு, வீடாக சென்று மின் கட்டண கணக்கீடு எடுத்தனர். அதில், பலருக்கு வழக்கத்தை காட்டிலும் மின்கட்டணம் கூடு தலாக வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர் களிடம் மின் நுகர்வோர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘நீங்கள் பயன்படுத்திய அளவுக்கு தான் மின் கட்டணம் வந்துள்ளது’ எனக் கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.
இருப்பினும், 3 கிராம ஊராட்சி களிலும் பலருக்கு வழக்கத்தை காட்டிலும் மின் கட்டணம் கூடுதலாக வந்ததால் இது குறித்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள எண்ணிய கிராம மக்கள் ஒன்று திரண்டு வெலக்கல் நத்தம் பகுதியில் உள்ள மின்வாரிய உதவி செயற் பொறியாளர் அலுவலகத்துக்கு நேற்று சென்று முறையிட்டனர்.
அங்கு அவர்களுக்கு சரியான பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உதவி செயற்பொறியாளர் பாபுவை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதற்கிடையே, ஆவேசமடைந்த பொது மக்கள் ஜெயபுரம் - வெலக்கல்நத்தம் பிரதான சாலையில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ் வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள் கூடுதலாக வந்துள்ள மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மறுமுறை ரீடிங் எடுக்க வேண்டும் எனக்கூறி முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த நாட்றாம் பள்ளி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், மின்வாரிய அதிகாரிகளிடம் கலந்து பேசி மின் கட்டணம் குறித்து அறிவிக்கப்படும் எனக்கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் ஒன்றரைமணி நேரம் கழித்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.