அல்லேரி மலை கிராமத்துக்கான ஜீப் ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 
தமிழகம்

பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து அல்லேரி மலை கிராமத்துக்கு ஜீப் ஆம்புலன்ஸ் வாகனம்

செய்திப்பிரிவு

வேலூர்: அணைக்கட்டு அருகே பாம்பு கடித்து குழந்தை உயிரிழந்ததை அடுத்து அல்லேரி மலை கிராமத்துக்கு ஜீப் ஆம்புலன்ஸ் வாகன வசதியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வேலூர் மாவட்டம் அணைக் கட்டு வட்டத்துக்கு உட்பட்ட அல்லேரி ஊராட்சிக்கு உட்பட்ட அத்திமரத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்த விஜி - பிரியா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தனுஷ்கா என்பவரை கடந்த 27-ம் தேதி பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக மலையில் இருந்து கீழே இறங்கி வருவதற்குள் குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து, அல்லேரி மலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அல்லேரி மலை கிராமத்துக்கு சென்று வரும் வகையில் ஜீப் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜீப் ஆம்புலன்ஸ் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனம்: அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஜீப்பை தற்காலிகமாக ஆம்புலன்ஸ் வாகனமாக பயன்படுத்தவுள்ளனர். இந்த ஆம்புலன்ஸ் வாகனம் அல்லேரி மலையில் எப்போதும் நிறுத்தப்படவுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஓட்டுநராக நியமித்துள்ளனர். அவரது தொடர்பு எண் அங்கு மலைவாழ் மக்கள் அனைவருக்கும் துண்டுப் பிரசுரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் அவரை தொடர்பு கொண்டால் மலையின் கீழ் பகுதிக்கு அவர் அழைத்து வந்து விட்டுச்செல்வார். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். ஜீப் ஆம்புலன்ஸ் வாகனத்தில் தேவையான அளவுக்கு அவசர சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகளை வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT